சென்னை:
காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், நான்கு செல்போன்கள் வைத்து பல பெண்களிடம் பேசிவந்தது மத்திய மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மத்திய மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை நான்கு நாட்களாக காணவில்லை. இதையடுத்து மாணவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்.
காவல்துறை விசாரணையில் மாணவர் நான்கு செல்போன்கள் வைத்திருந்ததும், வயது வித்தியாசமின்றி பல பெண்களுடன் பேசி வந்ததோடு, தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
தவிர அதே ஊரில் 23 வயது ஆசிரியை ஒருவரும், 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவரும் காணாமல் போனதும் தெரியவந்திருக்கிறது. மாணவன் அலைபேசி மூலம் பேசிய பல பெண்களில் இவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே அந்த மாணவர் ஆசிரியையுடன் எங்கேனும் சென்றுவிட்டாரா, அல்லது மாணவியுடன் சென்றாரா, அல்லது தனித்தனியாக காணால் போயிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மாணவரின் குடும்பத்தினர் பரிதவித்துப்போய், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருக்கிறார்கள்.
இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் தெரிவிப்பதாவது:
“அந்த ஆசிரியைக்கு 23 வயது ஆகிறது. ஆனால் காணாமல் போன மாணவர்கள் முறையே 14, 13 வயது உடையவர்கள். அவர்களுக்கு எதற்காக்க பெற்றோர், செல்போன் வாங்கித்தர வேண்டும்? அதிலும் அந்த மாணவன் நான்கு செல்போன்கள் வைத்திருந்திருக்கிறார். பல பெண்களுடன் பேசியிருக்கிறார். இதையெல்லாம் பெற்றோர் கவனிப்பின்மையாலேயே ஏற்படுகிறது.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் என்பது தவறு. கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனே கண்டறிந்து, சரியான வழிக்கு பிள்ளைகளை வழிநடத்த முடியும்.
குறிப்பாக செல்போனிலேயே நீண்ட நேரம் கழிக்கிறார்களா, குடும்பத்துக்குத் தெரியாமல் செல்போன் வைத்திருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அதே போல, செல்போனில் அவர்கள் பேசுவதையும் கண்காணிக்க வேண்டும்” என்கிறார்கள் காவல்துறையினர்.