சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டமன்ற சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதிநீர் வழக்கில், கடந்த மாதம் (பிப்ரவரி) 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தி வருகிறது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அரசை கண்டித்து திமுக இன்று பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டம் பிற்பகல் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் சிறப்பு கூட்டம் வடியது. கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
காவிரி நதிநீர் பிரச்னை காவிரி டெல்டா விவசாயிகள் வாழ்வாதார பிரச்னையாக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
இந்த அமைப்புகள் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்புகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பின் படியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்பாக 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும்.
இந்த தீர்மானத்தை சட்டசபை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தீர்மானம் குறித்து மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.