பெங்களூரு:
கேளிக்கை விடுதியில் கலந்துகொண்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் மீதான வழக்கில் அவரை விடுதலை செய்து விசாரணை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முத்தலிக், உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று கூறி உள்ளார். இவர் ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று மாற்றி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மங்களூரு அருகே உள்ள அம்னீஷியா பப் (Amnesia Pub) என்ற மதுபான கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், அங்கு பார்ட்டியில் கலந்துகொண்ட பெண்களை மீது தாக்குதல் நடத்தினார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் பிரபலமானவர் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக். அப்போது, பெண்கள் மதுஅருந்தும் கலாச்சார சீரழிவை தடுப்பதாக கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், ஸ்ரீராம் சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி 25 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மீதமுள்ள 5 பேரில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், 3 பேர் வெளிநாடு சென்றுவிட்டதால் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக நீதி மன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முத்தலிக், உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜரான முத்தலிக், தாக்குதல் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.