இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரபை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 74, 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அவர் தனது பதவிக்காலத்தில், நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். பல நீதிபதிகளை கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மலும், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் முஷரப் மீது தொடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தேசத்துரோக வழக்கில் பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முஷரப்பின் சொத்துகள் குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.
மேலும், முஷரப்பை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதுடன் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அக்ரம் ஷேக், நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முஷரபை கைது செய்து ஆஜர்படுத்தவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
முஷரப், தற்போது நாட்டில் இல்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், சிகிச்சை பெறப்போவதாக கூறி துபாய் சென்றார். அங்கிருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. அவர் அதே ஆண்டின் மே மாதம் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.