வாரணாசி:
மோடி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட உ.பி. மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினதாக அதிமுகவின் ராஜ்ய எம்.பி.யும்,மூத்த உறுப்பினருமான மைத்ரேயன் கலந்தகொண்டு விழாவை சிறப்பித்தார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 24ந்தேதி மறைந்த தமிழக முதல்வரின் 70வது பிறந்தநாள் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உ.பி.மாநில அதிமுக சார்பில் வாரணாசியிலும் ஜெ.பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அங்குள்ள கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உ.பி.மாநில அதிமுக நிர்வாகி கன்ஷியாம் மிஸ்ரா, மறைந்த தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணினோம். இதையடுத்து மாநிலத்திலுள்ள கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, புனித நகரமான வாரணாசியில் அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தோம்.
ஏழைகளுக்கு சமூகநலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அம்மாவுக்கு அன்பையும் பாசத்தையும் தெரிவிக்க நாங்கள் ஒன்றுசேர்ந்து, அவரது பிறந்தநாளை ஒரு பெரிய வழியில் கொண்டாட விரும்பினோம், இதுகுறித்து ராஜ்யசபா எம்.பி.யான மைத்ரேயனுடன் பேசினோம் அவர் பங்கேற்க ஒப்புக் கொண்டார் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெற்ற வாரணாசியில. உ.பி. மாநில அதிமுக சார்பில் ஜெ.பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதும், அதில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் கலந்துகொண்டு சிறப்பித்ததும் உ.பி. பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.