திருச்சி:

ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தில் உஷா என்ற கர்ப்பிணி மரணம் அடைந்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆயிரகணக்கான மக்கள் கூடி போலீசாரை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மாநகர், மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கடந்த இரு தினங்களாக தவிர்த்து வந்தனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

இதை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிப்பதை நிறுத்த கூடாது என்று அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.