பாஸ்டன், அமெரிக்கா
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் டிவிட்டர் போன்ற இணைய தளங்களில் உண்மை செய்தியை விட வதந்திகளே வேகமாக பரப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இணைய தளங்கள் மூலம் செய்திகள் தற்போது வேகமாக பரவி வருகின்றன. முகநூல் டிவிட்டர் ஆகிய சமூக தளங்களில் பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள், அறிவு சார் ஆர்வலர் என பல தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் தங்களுக்கு வந்த செய்திகளையும் பதிவிடுகின்றனர். அந்த செய்திகள் உடனடியாக மற்றவர்களால் பதியப்பட்டு பரவி விடுகிறது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனம் ஒன்று சமூக தளமான டிவிட்டரில் பரவலாகும் செய்திகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த 2006 முதல் 2017 வரை பதியப்பட்ட செய்திகளை குறித்து இந்த ஆய்வு நடந்தது. டிவிட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக தளங்கள் பொய் செய்திகளை பரப்புவதை அமெரிக்காவின் சட்ட வல்லுனர்களும் சர்வதேச நெறியாளர்களும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் இத்தனை கண்காணிப்புக்களையும் மீறி வதந்திகள் அதிகம் பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உண்மை செய்திகளை விட வதந்திகளே அதிக அளவில் மீள் பதிவு செய்யப்படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், ”அரசியல், கலையுலகம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய தவறான தகவல்கள் வெகு விரைவில் பலராலும் பரப்பப் பட்டு வருகிறது. உண்மைச் செய்திகள் மிகவும் மெதுவாகவே பரப்பப் பட்டு வருகின்றன.
இது போல வதந்திகளை உருவாக்குபவர்கள் பொதுவாகவே ஃபேக் ஐடிக்கள் என சொல்லப்படும் பொய்யான பதிவர்களே ஆவார்கள். இதனால் சமூக தளங்களில் கணக்கு தொடங்க பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஆயினும் அதையும் மீறி புகழ்பெற்றவர்களின் பெயரில் பல போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. உண்மையான பதிவர்களை விட இந்த பொய்யான பதிவர்களுக்கே அதிகம் பின் தொடர்வோர் உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.