மால்டா
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாசப் படகின் 40 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் மால்டா அரசு அந்தப் படகை சிறைபிடித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று அதை திருப்பித் தராததால் தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. மிகவும் செல்வச் செழிப்பாக வாழ்ந்த விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக ஒரு உல்லாசப் படகு உள்ளது. இந்தியன் எம்ப்ரெஸ் எனப் பெயரிடப்பட்ட அந்த படகு மால்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பணி புரியும் ஊழியர்களுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் பலமுறை நினைவுறுத்தியும் இந்த ஊதிய பாக்கி தரப்படவில்லை. தற்போது மல்லையா தர வேண்டிய ஊதிய பாக்கி 92,000 அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியக் கணக்குப்படி சுமார் 60 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது.
அந்த ஊழியர்கள் மால்டா அரசு மூலமாக சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அதனால் மால்டா அரசு அந்த இந்தியன் எம்ப்ரெஸ் உல்லாசப் படகை சிறை பிடித்து வைத்துள்ளது. ஊழியர்களின் ஊதியத் தொகையை உடனடியாக தர வேண்டும் எனவும் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது தெரிந்ததே. தற்போது அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.