டில்லி

ன்று பெண்கள் தினத்தை ஒட்டி மாநிலங்கள் அவையில் திமுக உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார்.

இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.   இதை ஒட்டி பல தலைவர்களும் வாழ்த்துச் செய்திகள் அளித்துள்ளனர்.  திமுகவின் மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழி இன்று மக்கள் அவையில் உரையாற்றினார்.

அப்போது அவர், “ஆண்கள் எங்களை தாய், தங்கை, மகள் எனக் கூறி வாழ்த்துக்களை வழங்குகிறார்கள்.    ஆனால் அது தேவை இல்லை என நான் எண்ணுகிறேன்.  நாம் அனைவரும் இப்போது ‘எங்களுக்கு ஆசிகள் தேவை இல்லை,  அங்கீகாரம் தான் தேவை’ என கூற வேண்டும்.   நாம் நமது தியாகங்களுக்காக மதிக்கப்படாமல் நமக்காக மதிக்கப்பட வேண்டும்.

இன்னும் பல குடும்பங்களில் பெண் குழந்தைகளை கொல்லும் பழக்கம் உள்ளது.   அத்துடன் வரதட்சணை கொலைகள், குடும்ப வன்முறை ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.   இவற்றுக்கு எப்போது முடிவு வரும் என தெரியவில்லை.

நாம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தில் தற்போது இருக்கிறோம்.   அதனால் அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும்”  என உரையாற்றினார்.