டில்லி:

ச்சநீதி மன்ற தீர்ப்பின்படி  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு  அதிமுக எம்.பி.க்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.

காவிரி நீர் பிரச்சினை குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மத்திய அரசோ உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்த முயற்சி எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கிடையில் சென்னையில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி “காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி.அது மிகவும் எளிதானது அல்ல என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி விவசாய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக உள்பட அனைத்துக்கட்சி எம்.பி.க்களும்  பாராளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.