
திருச்சி
திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஹெல்மெட் போடாமல் சென்றவரின் பைக்கை காவல் ஆய்வாளர் உதைத்ததில் உடன் சென்ற கர்ப்பிணிப்பெண் கீழே விழுந்து மரணம் அடைந்ததை ஒட்டி சாலை மறியலால் பெரும் பதட்டம் உண்டாகி உள்ளது.
வங்கிகளுக்கு கடன் வசூலித்து தரும் ஏஜன்சி நடத்துபவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா (வயது 40). இவருக்கு உஷா (வயது 36) என்னும் மனைவி இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில் உஷா தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு ராஜா தனது மனைவி உஷாவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சென்றுள்ளார்.

திருவெறும்பூர் அருகே துவாக்குடி என்னும் இடத்தில் உள்ள அண்ணா வளைவில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை அவர் வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். கோபம் அடைந்த காமராஜ் தனது ஜீப்பில் பைக்கை விரட்டிச் சென்றுள்ளார். ஜீப்பில் சென்ற காமராஜ் அதில் அமர்ந்த படியே இருசக்கர வாகனத்தை காலால் உதைத்துள்ளார்.

வண்டி நிலை தடுமாறி கீழே விழ்ந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். ராஜாவும் படுகாயம் அடைந்தார். ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் காமராஜ் அங்கிருந்து சென்று விட்டார். இதைக் கண்ட பொதுமக்கள் உஷாவின் உடலையும் படுகாயம் அடைந்த ராஜாவையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் அத்து மீறிய செயலால் ஆத்திரமடைந்த 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் திருச்சி – தஞ்சை வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேருந்துகள் புதுக்கோட்டை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. பொதுமக்களிடம் காவல்துரை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததுடன் போலிசார் மீது கற்கள் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் சாலையின் இருபுறமும் நின்ற பேருந்துகள் உட்பட பல வாகனங்களை காவல்துறையினர் அடித்து உடைத்தனர். இந்த தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தப்பி ஓடிய ஆய்வாளர் காமராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது அவர் வாகனத்துடன் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் குடிபோதையில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமராஜ் மீது வழக்குப் பதிந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.