‘‘2013–ம் ஆண்டு, ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன’’ என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மேல்சபையில் ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

2016–17 நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.

வரிச்சலுகைக்காகவும், மூலதன மேம்பாட்டுக்காகவும் மட்டுமே இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகை வங்கிகளின் இருப்புச்சீட்டில் இடம் பெறாது.

அதே நேரத்தில் கடனாளிகள், தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு தொடரும்.

இந்த கடன் தள்ளுபடியால் கடனாளிகள் பலன் அடைய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவ பிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், ‘‘2013–ம் ஆண்டு, ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.