பெங்களூரு
கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள நவீன் குமார் தோட்டாக்களை உத்திரப் பிரதேசத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் அதற்காக நவீன் குமார் என்னும் நபர் கைது செய்யப்பட்டதும் தெரிந்ததே. இவர் கவுரி லங்கேஷ் வீட்டை இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தது அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள கண்காணிப்பு காமிரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இவரை விசேஷ பிரிவு காவல்துறை கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பேருந்து நிலையத்தில் கைது செய்தது.
விசேஷ பிரிவு காவல்துறை அதிகாரி, “நவீன்குமாரை கைது செய்யும் போது அவரிடம் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. அவருடைய அங்க அடையாளங்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுடன் ஒப்பிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கர்னாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூரை சேர்ந்தவர் நவீன் குமார். இந்தக் கொலையை செய்ய தோட்டாக்களை அடுத்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உதவியுடன் உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஒரு தோட்டா ரூ. 1000 என்னும் விலைக்கு வாங்கி உள்ளதாக நவீன்குமார் விசாரணையின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.” எனத் தெரிவித்தார்.