இடுக்கி, கேரளா
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருவந்தபுரம் கிராம சபைக் கூட்டம் அந்த ஊரில் இருந்து வெளிநாட்டில் வசிப்போரும் பங்கு பெறும் சர்வதேச கிராம சபை கூட்டமாக நடைபெறுகிறது.
கிராம சபை கூட்டங்கள் என்பது கிராம பஞ்சாயத்தார் நடத்தும் கூட்டங்கள் ஆகும். பொதுவாக அந்தக் கூட்டங்கள் வழக்கமான ஒன்றாகவே இருக்கும். அதில் குறிப்பிடத் தக்க செய்திகள் எதுவ்ம் இருக்காது. ஆனால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருவந்தபுரம் என்னும் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டம் தற்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்த கிராம பஞ்சாயத்தின் சுகாதாரம் மற்றும் கல்விப் பொறுப்பை ஏற்றிருக்கும் நிசார் பராக்கல், “எங்கள் கிராமத்தில் இருந்து பலர் சவுதி, குவைத், அமீரகம், கத்தார் போன்ற அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் எங்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்துக் கொள்ள மிகவும் விருப்பம் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டங்களில் அவர்களும் கலந்துக் கொள்வதை நாங்களும் விரும்பினோம்
அதற்காக பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் ஒரு பெரிய டிவி திரை பொருத்தப்படது. அத்துடன் அந்த கூடத்துடன் ஐ எம் ஓ ஆப் மூலம் வெளிநாட்டிலுள்ள 20 பேர் இணைக்கப்பட்டனர். அதன் மூலம் அவர்களும் இந்தக் கூட்டத்தில் நடப்பதை பார்வை இடவும், தங்களின் கருத்தை தெரிவிக்கவும் முடிகிறது. இதன் மூலம் இது கிராம சபைக் கூட்டம் என்பதையும் தாண்டி சர்வதேச கிராம சபைக் கூட்டமாக மாறி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.