ஸ்ரீநகர்:

‘‘துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ராணுவம் கொடுத்த பதிலடியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து முதல்வர் மெஹபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியானது கவலை அளிக்கிறது. பலியான பொதுமக்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகளோடு இறந்தவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தேசிய மாநாட்டு கட்சி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் இறந்தவர்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு களப் பணியாளர்கள் என்று கூறி இதை நியாயப்படுத்த முடியாது’’ என்றார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து 2 மாத குளிர்கால விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு காரணமாக மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.