மடாதிபதிகளை பொறுத்தவரை, பக்தர்களால் மட்டுமே அறியப்பட்டவர்கள், மக்களாலும் அறியப்பட்டவர்கள் என இருவகை உண்டு. முதலாமாவர், தான் உண்டு, தன் வேலையுண்டு இருப்பவர்கள்.. இரண்டாமாவர்கள், ஆன்மிகத்தையும் தாண்டி மக்களோடு சேர்ந்து இயங்க விருப்பப்படுகிறவர்கள்.
இதில் இரண்டாம் ரகம் எதிர் மறை விமர்சனங்களை கொண்டு வந்துசேர்க்கும்… கொஞ்சம் ரிஸ்க்கானது. ஆனாலும் இந்த பாதையில் பயணித்தவர்தான் காஞ்சி ஜெயேந்திரர்.
காஞ்சி சங்கர மடத்தை பொறுத்தவரை, அதன் பொறுப்பை ஏற்கும் ஒவ்வொரு பீடாதிபதிகளுக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை, ஆளுமை உண்டு.
68-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், பக்தர்களால் பெரிய மகானாக பாவிக்கப்பட்டார். அவரின் கருணை நிறைந்த பார்வைக்கு ஏகத்துக்கும் பிரபலமானவர்கள்கூட ஏங்கினார்.
சிருங்கேரி, பூரி, துவாகரா மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு பீடங்கள் மட்டுமே ஆதிசங்கரர் நிறுவியவை என்றும், காஞ்சி மடம் இல்லவேயில்லை என்ற வாதம் காலம் காலமாகவே உண்டு. இப்போதுள்ள மடம் சிருங்கேரி மடத்தின் கும்பகோண கிளைக்கும் கிளை என்றும் அவர்கள் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1900களின் துவக்கத்தில் சந்திரசேகரர் காஞ்சி மடத்திற்கு தனிப்பெருமை கிடைக்கச்செய்தார். 1907ல் மடாதிபதியான அவர், வழிபாடுகள் பூஜை, அருளுரை போன்றவற்றில் மிகவும் தீவிரம் காட்டினார். சந்திரசேகர சுவாமிகள் பழைமையை போற்றிக்காப்பதில் பொக்கிஷம் என பெயர் பெற்றவர்.
அவரின் தரிசனமும் ஆசியும் கிடைத்த பிறகு தங்கள் வாழ்வில் இருள் நீங்கி பிரகாசம் கிடைத்தாக, அடி மட்டம் முதல் மேல் மட்டம்வரை ஏராளமானோர் ஆவணமே படுத்தியிருக்கின்றனர். மகாத்மா காந்தி முதற்கொண்டு மிகப்பெரிய ஆளுமைமைகள் சந்திரசேகரர் மீது பெரு மதிப்பு வைத்திருந்தனர்.
இருப்பினும், யாரையும் சந்திரசேகர சுவாமிகள் முக்கியத்துவம் கொடுத்து பார்த்ததில்லை..அனைவரையும் சமமாகவே பாவித்ததாலேயே அவரை நடமாடும் தெய்வம் என்று வர்ணித்தனர்.. ஆனால் அவர் தனது அடுத்து வாரிசாக தேர்ந்தெடுத்த ஜெயந்திரரோ, வேறு வகையில் பீடாதிபதி பயணத்தை அமைத்தார்.
அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் சுப்ரமணியம் என்ற இளைஞனை 1954ல் காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த வாரிசாக கொண்டுவந்து ஜெயேந்திர சரஸ்வதி என நாமகரணம் சூட்டினார் சந்திரசேகரர் சுவாமிகள்.
ஜகத்குரு என்றழைக்கப்பட்ட மகா பெரியவர் சந்திரசேகரர் 1994ல் மறைந்தபோது மடாதிபதி பொறுப்பேற்ற ஜெயேந்திரர், அதிரடி காரியமாக மடத்தின் கதவுகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் திறந்துவைத்தார். அதற்கு முன்பு பிராமணர்களுக்கு மட்டுமே தரிசனம்,முன்னுரிமை என்ற குற்றச்சாட்டு சங்கர மடத்தை சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது.
வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்ற சந்திரசேகரரின் மரபையும் அவர் மாற்றிக்கொண்டார்., நவீன மய உலகில் நீண்ட பயணங்களை சாத்தியப்படுத்தாது என்று புரிந்துகொண்டு ஜெயேந்திரர் வாகன பயணத்துக்கு மாறினார்.
அதனால் தான் விளிம்பு நிலை தமிழர்கள் வசிக்கும் மும்பை தராவி பகுதிக்கு சென்று ஆன்மீக பணியையும் சமூக நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு விட்டு அடுத்த ஓரிரு தினங்களில் காஞ்சிக்கு திரும்பி மடத்தின் பணிகளை செய்யமுடிந்தது.
காஞ்சியை சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் சேரிப்பகுதிகளுக்கு ஜெயேந்திரரின் விஜயம் அடிக்கடி இருக்கும். அதேபோல, தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தையும் சங்கர மடத்தில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் ஒரு தரப்பு பிராமணர்கள் மத்தியில் இது மனவருத்தத்தை கூட ஏற்படுத்தியது.
ஆன்மீகம், போதனைகள் என்ற கட்டத்தை தாண்டி, சமூக நலப்பணிகள், மத நல்லிணக்கம் போன்றவற்றில் அதிகம் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்…
பொருளாதார ரீதியாய் உதவக்கூடிய மேல்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை களத்தில் இறங்கவைத்து விளிம்பு நிலை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.
ஜனக்கல்யாண், ஜன ஜாக்ரன் போன்ற அமைப்புகளை தொண்டுள்ளம் கொண்ட பக்தர்களோடு நிறுவச்செய்து, கிராமங்களில் பல்வேறு பணிகளில் சங்கரமடத்தின் கைகாட்டல் கோலேச்சியது. சிறு தொழில் தொடங்க நிதியுதவி, ஆதரவற்றோருக்கு நிதியுதவி, உடல் ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குவது என வேகமான பயணத்தில் பாய்ந்தது.
சங்கர மடத்தின் மூலம் கிடைத்த உதவிகள் சேரிப்பகுதிகளை சென்றடைந்த விதம் பிரமிக்க தக்க வகையில் இருந்தன. சங்கர மடத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட சங்கர வித்யாலாக்கள் உயர்தர பள்ளிக்கல்வியில் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு பேருதவியாக அமைந்தன.
அதேபோல சங்கர மடத்தால் நிறுவப்பட்ட சங்கர நேத்ராலாயாக்கள், கண்ணொளி திட்டத்தில் பெரும் பலனை வாரிக்கொடுத்தன. கிராமப்புற முதியோர்களை கேட்டால் சங்கரா நேத்ராலாயக்களின் அருமை பெருமைகளை சொல்வார்கள். இலவச கண் பரிசோதனை முகாம்களும் அவற்றின் மூலம் கண்டறிபவர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைகளை பற்றியும் சொல்லி சிலாகிப்பார்கள்..
இத்தனைக்கும் ஜெயேந்திரர் இப்படி வித்தியாசமான அவதாரம் எடுப்பார் என்று யாருமே நினைக்கவில்லை. காரணம், 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந்தேதி திடீரென மடத்திலிருந்து காணாமல் போய் பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியதுதான்.
துறவிகள் புனித விரதமிருப்பதுடன் பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என சொல்லப்படும் சதுர்மாஸ்யா காலத்தில், எப்போதுமே கையில் வைத்திருக்கக்கூடிய புனிதமான தண்டத்தை உதறிவிட்டு சென்றவர் ஜெயேந்திரர் இந்த நடவடிக்கையால் காஞ்சி சங்கர மடம் அகில இந்திய அளவில் பேசப்படும் சர்ச்சைப் பொருளாக மாறிப்போனது
மடத்தின் தீவிர பக்தரான ஆர். வெங்கட்ராமன் அப்போது துணை குடியரசு தலைவராக இருந்தார்.. ஜெயேந்திரரை தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் புலனாய்வு அமைப்பு கள் அத்தனையும் வலைபோட்டு தேடின. கடைசியில் கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள தலைக்காவேரி அருகே அவர் கண்டு பிடிக்கப்பட்டார். காணாமல் போனதற்கு அவர் சொன்ன காரணங்கள் பொருத்தமாக இல்லையென்றா லும் மீண்டும் மடாதிபதியாக அவரை அமர்த்தினார் சந்திரசேகர சுவாமிகள்.
பின்னாளில் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர் ராமன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட போதும் அகில இந்திய அளவில் மீண்டும் சர்ச்சை நாயகனாக பேசப்பட்டார்.
ஆனால் ஒரு கொலை வழக்கை, புலனாய்வு அதிகாரிகளை கொண்டு எவ்வளவு பரபரப்பாக்க முடியுமோ அந்த அளவுக்கு, கிரைம், கிளாமர், பாலியல் புகார் என சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் விஷயங்களை நுழைத்து திசை மாற்றப்பட்ட போதே வழக்கு தொடரப்பட்டதின் உண்மையான நோக்கம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய அவருக்கு என்ன நேரும் என்று சிக்கவைத்தவர்களுக்கு தெரியும்..மற்றவர்களுக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே நீதிமன்றத்தால் நிரபராதி என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர்.
பரபரப்பு சம்பவங்களின் அடிப்படையில் இப்படி சர்ச்சையின் நாயகனாக பேசப்பட்ட மடாதிபதிதான், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவ மனைகள், சேவை மையங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் மடத்தின் பணிகளை விரிவு படுத்தியவர்.
கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கென்றே ஜெயேந்திரர் நிறுவிய சந்திரசேகரர் கிராம வளர்ச்சி அறக்கட்டளை யால் பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள் ஏராளம்.
காஞ்சியில் உள்ள வேதபாடசாலைகள், பாலாற்றங்கரையில் கலை நயத்தோடு மிளிரும் மகா பெரியவருக்கான மணி மண்டபம், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தற்போது மிளிரும் விதம் போன்றவையெல்லாம் ஜெயேந்திரரின் பெயரை என்றென் றைக்கும் சொல்லக்கூடியவை
இன்னொரு புறம் நாட்டின் முதற்குடிமகனான ஜனாதிபதி முதற்கொண்டு, பிரதமர், அரசு நிர்வாகத்தை நடத்தும் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் காஞ்சி சங்கர மடத்திற்கு தரிசனத்துக்காக வந்துசெல்வதை பெருமையாக கருதும் அளவுக்கு அரசியலின் அதிகார பீடமாகவும் மாற்றியதில் ஜெயேந்திரருக்கு பெரும் பங்குண்டு.
தமிழகத்தின் அனைத்து கோவில் விழாக்களுக்கும் சங்கர மடத்திற்கு முதல் மரியாதை.. அவ்வளவு ஏன் திருப்பதி பெருமாள் கோவிலிலும் சங்கர மடத்தின் செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொண்டவர் ஜெயேந்திரர்.
தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநில கோவில் விழாக்களிலும் காஞ்சி சங்கர மடத்தின் பிரதிநிதித்துவம் வேண்டி விரும்பி அழைக்கப்பட்டு, ஆன்மீகத்தின் தேசிய கேந்திரமாக உருப்பெற்றது. வடநாட்டு மடாதிபதி களுக்கு காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு ஜீரணமாகாத விஷயமாக உறுத்த ஆரம்பித்தது.
பாபர் மசூதி பிரச்சினை ஆரம்பித்த காலகட்டத்திலேயே இஸ்லாமியர்களோடு இணக்கமாக சென்று பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று பொட்டில் அறைந்தாற்போல் சொன்னவர் ஜெயேந்திரர். மத நல்லிணக்கத்தில் மற்ற மதத்தலைவர்களையும் மதித்து நட்பு பாராட்டியவர்.
சங்கர மடத்தின் பக்கத்திலேயே இருக்கும் பள்ளிவாசல் எந்த ஒரு கால கட்டத்திலும் சின்ன இடையூறுகளைகூட சந்தித்ததில்லை.
ஜெயேந்திரர் காலமாகி மடத்தில் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் அங்கே திரண்டிருந்த பிப்ரவரி 28ந்தேதி மாலை வேளையிலும், சரி, மார்ச் ஒன்று அதிகாலை வேளையிலும் சரி, அந்த பள்ளி வாசலின் தொழுகை அழைப்புகள் ஒலிபெருக்கிகளில் தங்கு தடையின்றி ஒலித்துக்கொண்டேதான் இருந்தன.