டில்லி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பி சென்று விட்டனர். அவர்களை திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தேவையான முயற்சிகளை சிபிஐ செய்து வருகின்றது.
இந்நிலையில் நிரவ் மோடிக்கும் மெகுல் சோக்சிக்கும் லாக் அவடு மற்றும் புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 22ஆம் தேதி இந்திய குடியேற்றத்துறை அறிவித்தது. லாக் அவுட் என்பது வெளிநாடு செல்ல தடை விதிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புளூ கார்னர் நோட்டிஸ் என்பதும் ரெட் கார்னர் நோட்டிஸ் என்பதும் என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
ஒருவர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை விட்டு செல்ல முற்பட்டாலோ அல்லது ஏற்கனவே தப்பி ஓடி இருந்தாலோ இந்த நோட்டிசுகள் வழங்கப்படுகின்றன. புளூ கார்னர் நோட்டிஸ் என்பது குற்றத்தில் ஈடுபட்ட நபர் எங்கிருக்கிறார் எனக் கண்டறிந்து அவர் இருப்பிடம் மற்றும் அடையாளங்களைக் கொண்டு அவரை விசாரணை நடைபெறும் நாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதாகும்.
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது மிகவும் கடுமையான குற்றங்களுக்கு வழங்கப்படுவதாகும். அதன் படி குற்றம் செய்தவரை கண்டு பிடித்து அவரை அவர் தங்கி உள்ள நாட்டின் அனுமதி பெறாமலே கைது செய்யலாம். அத்துடன் அவர் தங்கி இருந்த நாட்டின் உதவியுடன் அவர் நாடு கடத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்படலாம்.
நிரவ் மோடி மற்றும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.