சென்னை:
சர்சைசையின் நாயகனாகவே தனது 83 வயதில் மரணமடைந்திருக்கிறார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி.
தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். 40 ஆண்டுகள் கடந்து 1994ஆம் ஆண்டில் காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்றார்.
தனது பதவி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டார் ஜெயேந்திரர் சரஸ்வதி. 1986 ஆம் வருடம், துறவறத்துக்கு அடையாளமாக இருந்த தண்டத்தை போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார்.
கிட்டதட்ட ஒருமாதம் அவர் எங்கே இருந்தார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தலைக் காவிரியில் இருந்த அவரை கண்டுபிடித்து காஞ்சிக்கு அழைத்து வந்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த காலகட்டத்தில்தான் விஜயேந்திரரை இளைய மடாதிபதியாக சங்கரமடம் நியமித்தது.
இடையில், “தாழ்த்தப்பட்டவர்கள் சுத்தமில்லாதவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள்” என்றெல்லாம் இவர் தெரிவித்த கருத்துக்கல் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன.
இதற்கிடையே அரசியல் அமைப்பு ஒன்றையும் துவங்கினார். “மடாபதிபதிக்கு இது அழகல்ல” என்று பலர் எடுத்துக்கூறியும் இவர் கேட்கவில்லை. அந்த அமைப்பின் சார்பில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றவர் அவர்களை விட்டு ஒதுங்கியே நடந்துகொண்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்ததாக பாலியல் சர்ச்சை.
பிரபல எழுத்தாளராக விளங்கிய அனுராதா ரமணன், தன்னிடம் ஜெயேந்திர்ர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொள்ள முயன்றதாக வெளிப்படையாக எழுதினார். அதோடு இந்த விசயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் பேட்டிகள் அளித்தார்.
இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்தார்.
அடுத்த சர்ச்சை.. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு. 2002 ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் புகுந்த மர்மக் கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தார்கள்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயந்திரர்.
அடுத்து சங்கரராமன் கொலை வழக்கு. 2004-ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயில் அலுவலகத்திலேயே அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 2004ஆம் ஆண்டு தீபாவாளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயேந்திரர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
பத்து வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை ஆனார்கள்.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி சர்ச்சையின் நாயகனாக திகழ்ந்த ஜெயந்திரர் , தனது 83ம் வயதில் இன்று மரணமடைந்தார்.