சென்னை:
சென்னை கிரின்வேஸ் சாலையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று நள்ளிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிரின்வேஸ் சாலையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகள் உள்ளன. நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் 10க்கும் மேற்பட்டோர், முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என பாதுகாவலர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், அவர்களை உள்ளே விட மறுத்த காவலர்கள், நாளை காலை தலைமை செயலகம் சென்று மனு கொடுங்கள் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மாற்று திறனாளிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய மாற்றுத்திறனாளிகள், ‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளோம். மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு தகுதி தேர்வு அடிப்படையில் பணிவழங்காமல், சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அது சம்பந்தமாக முதல்வரிடம் மனு அளிக்க வந்தோம்’’ எனக் கூறினர்.
முதல்வரை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்காததால், நாங்கள் சாலை மறியல் செய்வதாக கூறினார். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.