சென்னை
பாஜக தலைவர் எச் ராஜா ஒருமையில் பேசுவது தவறானது என சென்னை ஆர் கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கூறி உள்ளார்.
அதிமுகவின் சசிகலா அணியில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளவர் சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன். இவர் ஆர் கே நகர் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தினகரன், “சென்னை ஐஐடியில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது மிகவும் தவறான செய்கையாகும். சமஸ்கிருதம், இந்தி போன்ற வடமொழிகளை பாஜக திணிக்க முயல்கிறது. வெடிகுண்டு கலாச்சாரம் இல்லாமல் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் பாஜக இங்கும் அதை வளர்க்க முயல்கிறது.
பாஜக வின் எச் ராஜா ஒருமையில் பேசி வருகிறார். இந்த ஒருமையில் பேசும் கலாச்சாரம் மிகவும் தவறானது. அதை எச் ராஜா நிறுத்த வேண்டும். மேலும் ஐஐடியில் சமஸ்கிருதப் பாடலை பாடியதில் தவறில்லை எனவும் ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக வடமொழிகளை இங்கு திணிப்பது உறுதி ஆகி விட்டது” எனக் கூறினார்.
ஜெயலலிதாவின் சிலை திறப்பு பற்றிய கேள்விக்கு, “அவசர அவசரமாக ஜெயலலிதாவின் சிலையை திறந்துள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியலுக்காகவே ஆகும்” என பதிலளித்தார்.