மும்பை:
போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மறு விசாரணை கோரிய மனுவை விசாரித்த பெண் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். சிபிஐ.க்கு எதிராக கேள்விகள் எழுப்பியதை தொடர்ந்து இந்த மாற்றம் நடந்துள்ளது.
போலி என்கவுண்ட்டரில் சோஹ்ராபுதீன் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை மறு விசாரணை நடத்தக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ரேவதி மோஹிதே தீரே விசாரித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி சிபிஐ.க்கு எதிராக சில கேள்விகளை நீதிபதி எழுப்பியிருந்தார்.
முன்னதாக நீதிபதி தீரே எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதிலளிக்க சிபிஐ சார்பில் ஆஜரான வக்கீல் அனில் சிங் 3 வாரங்கள் அவகாசம் கேட்டார். ‘‘ஏற்கனவே இந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிவிட்ட நிலையில் மறு விசாரணை மனுவின் தெரியாமல் சிபிஐ செயல்படுகிறது.
முன் அனுமதி இல்லை என்ற ஒரே காரணத்தால் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து விடுவிக்க போதுமான ஆதாரமா? என்றும், வழக்கில் இருந்து குஜராத் மூத்த போலீஸ் அதிகாரிகளை விடுவிக்கும் உத்தரவை எதிர்த்து ஏன் எதிர்க்கவில்லை?’’ என்று நீதிபதி தீரே கேள்வி எழுப்பியிருந்தார்.
‘‘இந்த வழக்கில் சிபிஐ வசம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை’’ என்று நீதிபதி தீரே சிபிஐ வககீல் அனில் சிங்கிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீதிபதி ரேவதி மாஹிதே தீரே மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மறு விசாரணை கோரும் மனுவை நீதிபதி என்.டபிள்யூ. சாம்ப்ரே விசாரித்தார்.
இந்த வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் அமித்ஷா உள்பட 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 15 பேர் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 42 சாட்சிகளில் 34 பேர் பல்டி சாட்சிகளாக மாறிவிட்டனர். கடந்த 12ம் தேதி மேலும் 2 சாட்சிகள் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பல்டி அடித்தனர்.