சென்னை:

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணைஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெ. உருவ சிலையை திறந்து வைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஏற்கனவே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி சுமார் 10.30 மணி அளவில் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் கட்சி அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர். அதைத் தொடர்ந்து சுமார் 11.05 மணி அளவில் முதல்வர் எடப்பாடி கட்சி அலுவலகம் வந்தார். சுமார் 11.10 மணி அளவில் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இன்று  ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலை திறக்கப்படுவதையொட்டி இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் குவிந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் ஜெ.வின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது அம்மா’ நாளிதழும் தொடங்கப்படுகிறது.

சிலை திறப்பு விழாவையொட்டி அதிமுக அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ,இந்நாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

(சிலை திறக்கும் முன் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெ. உருவச்சிலை)

தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக, அம்மா நாளிதழும் வெளியிடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமை அலுவலகம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வழி நெடுகிலும் அதிமுக கொடிகள், வாழ்த்து பேனர்கள் என அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நலத்திட்ட உதவிகள், அன்னதானம், சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.