சென்னை:
முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தமிழருவி மணியன் நடத்துகிறார்.
கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடக்க இருக்கிறது ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தமிழருவி மணியன் தலைமையில் நடந்தது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக அறிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு மாநாட்டை ரஜினிக்காக நடத்த இருக்கிறார் தமிழருவி மணியன். இதற்கு ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநாடு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மாநாடு நடக்கும் மே மாதத்துக்கு முன்பே ரஜினியின் கட்சிப் பெயர், கொடி ஆகியவை அறிவிக்கப்பட்டுவிடும். ஆகவே மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இது அமையும் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.