சென்னை

ர்செல் நிறுவனத்தின் மொபைல் சேவை பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த தாம்பரம் வாடிக்கயாளர்கள் ஏர்செல் அலுவலகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது.    ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த நிறுவனம் இருந்ததால் வாடிக்கையாளர் அதிக அளவில் உள்ளனர்.   பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் இறங்கிய போதும்   ஏர்செல்லுக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இணைப்பு முழுவதுமாக நின்று போனதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினார்கள்.,   பலர் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு விளக்கம் கோரி உள்ளனர்.    நிறுவனம் இது தொழில்நுட்ப ரீதியான ஒரு சாதாரண பிரச்னை எனவும் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் விளக்கம் அளித்தது.

அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஏர்செல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜெண்டுகளுக்கு பாக்கித் தொகை அதிகம் உள்ளதால் 9 ஆயிரம் டவர்களில் சுமார் 8,500 டவர்களில் பணி நிறுத்தப்பட்டுள்ளதக அறிவித்தனர்.    இதையொட்டி மாநிலம் எங்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள ஏர்செல் நிறுவன அலுவலகத்துக்கு இன்று பெருமளவில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.   அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது.   இதனால் ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் அந்த அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.   காவல்துறையினர் தலையிட்டு கும்பலை கலைத்துள்ளனர்.