டில்லி:

‘கண்ணசைவு புகழ்’ பிரியா வாரியார் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரியா வாரியரின் மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் பிரியா வாரியார் மீது நடவடிக்கை எடுக்க  தடை வித்துள்ளது.

டந்த 14ந்தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி, யூ டியூப் வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது.

அதில் ‘மாணிக்க மலராய பூவி…’ என்ற மலையாள  மெல்லிசை பாடல் ஒரு கல்லூரி / பள்ளி விழாவில் பாடுவதுபோல படமாக்கப்பட்டு உள்ளது. அந்த பாடல் காட்சியில் நடித்திருந்த பிரியா பிரகாஷ் வாரியாரின் கண்ணசைவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், ஐதராபாத், மும்பை காவல் நிலையங்களில் புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதை ரத்து செய்யக்கோரி பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரியா வாரியர் சார்பில் வக்கீல் பல்லவி பிரதாப் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில்,, ‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் வரிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி கடந்த 14-ந் தேதி ஐதராபாத் பலக்னாமா போலீஸ் நிலையத்திலும், மும்பை போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்யப்பட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அந்த  படத்தின் இயக்குனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பாடலின் திரிக்கப்பட்ட, தவறான விளக்கங்களை காரணமாக கொண்டு புகார் செய்துள்ளனர். மற்ற சில மலையாளம் பேசாத மாநிலங்களிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன.

அடிப்படை ஆதாரமற்ற புகார்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஒரு தடையாகவும், அப்பட்டமான சட்ட மீறல் நடவடிக்கை யாகவும் உள்ளது. எனவே இது தொடர்பாக  தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும்  ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  இதில் கிரிமினல் ஏதும் இல்லையே என்றும், பிரியா வாரியார் மீதான அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தடை விதித்துள்ளது.