ஊட்டி:

போலீசாருக்கு பயிற்சி மைதானம அமைப்பதற்காக 487 மரங்கள் வெட்டப்பட்டதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சர்ச் ஹில் ஹேவ்லாக் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் தைலம், புன்னை மரங்கள் அதிகளவில் வளர்ந்திருந்தன. இவை பெரும்பாலும் 50 ஆண்டுகளை கடந்த மரங்களாகும். இந்த பகுதியில் போலீசாருக்கு பயிற்சி மையம் அமைக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த பகுதியில் இருந்த 497 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

அந்த பகுதி பல பறவைகள், சிறுத்தைகள், கரடிகள் அதிகளவில் வசிக்கும் பகுதியாகும். மரங்கள் அவசர அவசரமாக வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை காவலர் குடியிருப்பு பகுதியாக போலீசார் அமைத்திருக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் காவல் துறைக்கு சொந்தமானது. இங்கு முழு அளவிலான பயிற்சி மைதானம் இல்லை. இது நீண்ட நாள் தேவையாக இருந்து வருகிறது. தற்போது தான் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது’’ என்றார்.

2 ஆண்டுகளாக இதற்கான நடைமுறைகள் நடந்து வந்துள்ளது. மரங்களை வெட்ட உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எஸ்பி முரளி ராம்பா கூறுகையில், ‘‘ஜனவரி 31ம் தேதி இதற்கான டெண்டர் விடப்பட்டது. ரூ. 18.93 லட்சம் ஏலம் போனது. 487 மரங்களை வெட்டி இடத்தை சுத்தம் செய்ய ஒப்பந்ததாரர் கெம்பராஜூக்கு 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது’’ என்றார்.

வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. குறைந்த அளவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரங்களை வெட்டி உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.