சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல், அரசியலில் விஜயகாந்த் எங்களுக்கு மூத்தவர் என்றும், அவரிடம் ஆசி பெற்றேன் என்றும் கூறினார்.

ஜெ.மறைவுக்கு பிறகு திரையுலகை சேர்ந்த பலர் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரும் 21ந்தேதி முதல் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதுபோல நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வரும் 21ந்தேதி அரசியல் பயணம் தொடங்க உள்ள கமல், பிரபலமான அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனையும், வாழ்த்தும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று திமுக தலைவர் கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் போன்றோரை சந்தித்து பேசிய நிலையில் இன்று விஜயகாந்தை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய கமல்,  விஜயகாந்தை சந்தித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அரசியலில் எனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரும் வாழ்த்து தெரிவித்தார்,  நீங்களெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என என்னை வாழ்த்தினார் என கமல் கூறினார்.

மேலும் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல், திராவிட அரசியலை பின்பற்றி அரசியலில் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஜினி, கமல் அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருந்த விஜயகாந்த், சினிமாவில் கமலும், ரஜினியும் மூத்தவர்கள் ஆனால், அரசியலில் நான்தான் அவர்களுக்கு மூத்தவன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.