சென்னை:
நடிகர் கமலஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இருவரும் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இருவரும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சந்தித்து பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கும்போது, என்னவோ ரூஸ்வெல்டும்- வின்ஸ்டன் சர்ச்சிலும் சந்தித்துக் கொண்டதைப் போல பில்டப் செய்கிறீர்களே என்று கிண்டலடித்தார்.
வரும் 21ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் முன்னாள் முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆலோசனையும், ஆசிகளும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்த நிலையில், நேற்று திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இருவரும் அரசியலில் வேறு வேறு பாதையில் பயணிக்க உள்ள நிலையில் இருவரின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தமிழ் தாத்தா உ.கே.சாமிநாதையரின் 164 வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள், ரஜினி கமல் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டது என்னவோ ரூஸ்வெல்டும்- வின்ஸ்டன் சர்ச்சிலும் சந்தித்துக் கொண்டதைப் போல பில்டப் செய்யப்படுவதாக கடுப்புடன் கூறினார்.மேலும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதால் புதிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.