டில்லி

ரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெற்றோர்களுக்கு தண்டனை தரவேண்டும் என அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   விரைவில் இந்த மக்கள் தொகை உலகிலேயே அதிகம் மக்கள் உள்ள நாடான சீனாவுக்கு இணையாக உயரக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   இதற்காக பல சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து 3 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.   அவர்கள் அனுஜ் சக்சேனா, பிருதுவிராஜ் சௌகான், மற்றும் பிரியா சர்மா ஆகியோர் ஆவார்கள்.   அந்த மனுவில், “இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்னும் 4 ஆண்டுகளில் இது 150 கோடியை தொட வாய்ப்பு உள்ளது.    இதனால் வறுமை அதிகரிக்கும்,  வேலைவாய்ப்பின்மை,  சுற்றுச் சூழல் கேடு உள்ளிட்டவைகளும் மேலும் அதிகமாகும்.

இதனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கவோ அல்லது இரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு ஏதேனும் ஊக்கப்பரிசு அல்லது சலுகைகள் தரவேண்டும்.   இது குறித்து ஒரு கொள்கையை உருவாக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொது நல மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.