சென்னை:
தமிழகத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணை கிணறுகளால் விவசாயம் அழிந்து வருகிறது என்று பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய எண்ணை கிணறு அமைத்தால், அந்த பகுதியில் விவசாயம் முழுவதும் அழிந்துவிடும் எனவும் ராமதாஸ் கூறி உள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய எண்ணை கிணறு அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களை கச்சா எண்ணை, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் வாயுவை எடுக்கும் பெட்ரோலிய மண்டலமாக மாற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக திருவாரூர் மாவட்டம் குளக்கரையை அடுத்த கடம்பங்குடி என்ற இடத்தில் எண்ணை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணை எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டது.
இதற்கான பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை நடத்தியதால் அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இத்தகைய சூழலில் பொதுமக்களையும், ஓ.என்.ஜி.சி அதிகாரிகளையும் அழைத்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசோ அந்தக் கடமையை செய்யாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஏவல் அமைப்பாக மாறி எண்ணை கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை மிரட்டி வருகிறது.
கடம்பங்குடியில் எண்ணை கிணறுகள் அமைக்கப்படுவது குறித்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட தற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அதற்கு அடுத்த நாள் 10-ஆம் தேதி எண்ணை கிணறுகளுக்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்தொடர்ச்சியாக நேற்று எண்ணை கிணறுகளை முற்றுகையிட்ட 300 பேரை காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்துள்ளது.
இந்த போராட்டத்தை முன்னெடுத்ததற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மீது காவல்துறை இதுவரை 10 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அத்துடன் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம், முரளி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை துடித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணை வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மக்களின் உணர்வுகளை மதிப்பது தான் மக்களாட்சி தத்துவமாகும்.
அதை மதித்து கடம்பங்குடியில் எண்ணை கிணறு அமைக்கும் திட்டத்தை நிறுத்தவும், இந்தப் பிரச்சினையில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.