சென்னை :
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஜெ.வின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையமும், கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 3 முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள மருத்துவர் பாலாஜி, ஜெ.விடம் கைரேகை பெற தனக்கு யாரும் எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கவில்லை என்றும், வாய்மொழி உத்தரவின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டதாக கூறி இருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பாலாஜி, தனது அதிகாரத்திற்கு உட்பட்டே ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ததாக புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளது.
ஜெ.சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் 5 மருத்துவர்கள் அடங்கி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் அரசு மருத்துவர் பாலாஜியும் இடம் பெற்று இருந்தார்.
‘இதன் காரணமாகவே மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை ஆணையம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை ஆணையத்தில் ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி யின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, ஜெ. கைரேகை பெற உங்களுக்கு உத்தரவிட்டது யார் என்றும், முதல்வராக இருந்த ஒருவரின் கைரேகைக்கு சான்றொப்பமிட வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரோ முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வரும் மூத்த அமைச்சரோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மருத்துவர் பாலாஜி, யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், வாய்மொழி உத்தரவின் பேரில் சான்றொப்பமிட்டதாகவும் கூறியதாக ஆணையம் தரப்பில் தகவல் வெளியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டது என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், வந்து மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவர்களுக்கு அனுப்பிய எழுத்துப்பூர்வமான கடிதங்கள் சுகாதாரத்துறையிடம் உள்ளன.
ஆனால் கைரேகை பெற்றதை பொறுத்தவரையில் நான் டாக்டர் பாலாஜிக்கு வாய்மொழி உத்தரவையோ எழுத்துப்பூர்வமாகவோ எதையும் கொடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மருத்துவர் பாலாஜி தற்போது புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.