சென்னை
சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு கட்சியின் தலைமையை மீறி ஆதரவு தெரிவித்த விஜயதாரணி காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சபாநாயகரிடம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு இது குறித்து மேலிடத்துக்கு தெரிவிக்க உள்ளதாக கூறி உள்ளார்.
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் விஜயதாரணி கலந்துக் கொண்டார். அப்போது, “தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் உருவப் படம் அவர் மரணம் அடைந்து ஒரு வருடத்துக்கு பிறகுதான் திறக்கப்பட்டுள்ளது. இது மிகவும் காலதாமதம் என எனக்கு தோன்றுகிறது. தமிழக சட்டசபையில் பெண் தலைவர்கள் படம் இடம் பெற்றால் என்ன தவறு?
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, ராகுல் காந்தி, திருநாவுக்கரசர் போய் பார்த்தார்கள். அப்போது அவர் குற்றவாளி என்பது அவர்களுக்கு தெரியாதா? ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின் போது ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டபோது அவர்களுக்கு அவர் குற்றவாளி என்பது தெரியாதா? நான் படத்திறப்பை ஆதரிப்பது என் தனிப்பட்ட உரிமை. அதை பறிக்க யாராலும் முடியாது.
எனது கட்சியின் முடிவுக்கு மதிப்பு கொடுத்து நான் படத்திறப்பு விழாவில் பங்கு கொள்ளவில்லை. ஆனால் கருத்து சொல்வதை கட்சி தடுக்க முடியாது. இந்த திறப்புவிழாவுக்கு நான் ஆதரவு கொடுத்ததற்காக கட்சித் தலைமை எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்” எனக் கூறினார்.