சென்னை:

மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தற்போது, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிவப்பு நிறத்திலான சீருடைகள் 4 முறை  தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றப்படுவதாகவும்,  9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிக்கூடங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சீருடைகளை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே விதமான சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மற்றொரு வகையான சீருடையும் மாற்றப்படுவதாக  கூறப்படுகிறது.

இதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்சட்டை இளஞ்சிவப்பு நிறத்திலும், சாம்பல் நிற (ஆஷ்) முழுக்கால் சட்டையும் வழங்கப்பட உள்ளதாகவும்,  மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் சல்வார், சாம்பல் நிறத்தில் கமீஸ் மற்றும் ‘வெய்ஸ்ட் கோர்ட்’  வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீல நிற கோடுபோட்ட மேல்சட்டையும், ‘நேவி புளூ’ நிறத்தில் முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு நீல நிற கோடுபோட்ட சல்வார், ‘நேவி புளூ’ நிறத்தில் கமீஸ் மற்றும் ‘வெய்ஸ்ட் கோர்ட்’  வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள கூறப்படுகிறது.

இந்த ஒரே விதமான சீருடை வருகின்ற கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறி உள்ளார்.