டில்லி

பாஜக தலைவர் அமித்ஷாவின் பேரணி குறித்து பசுமைத் தீர்ப்பாயம் மத்திய அரசுக்கும்,  அரியானா அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் பகுதியில் வரும் 15ஆம் தேதி அமித்ஷா ஒரு பேரணி நடத்த உள்ளார்.  இந்தப் பேரணியில் சுமார் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.   இதை ஒட்டி வழக்கறிஞர் விக்டர் திசா என்பவர்  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அந்த மனுவில் இந்தப் பேரணியில் பங்கு பெற உள்ள மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் சுமீர் ஜோதி, “டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மோசமான காற்று மாசுபாடு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.   அப்படி இருக்க இது போல லட்சம் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவது காற்றை மிகவும் மாசு படுத்தும்.

இந்தப்பேரணியில் மோட்டார் சைக்கிள் எண்ணிக்கையை குறைக்கலாம்.   அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்தலாம்.   அது சுற்றுப்புற சூழலை பாதிக்காது.  மேலும் பேரணியில் கலந்துக் கொள்பவர்கள் உடல்நலத்துக்கும் நல்லது”  என தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த மனுவுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அரியானா மாநில அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.