போம்ஜா, அருணாசல பிரதேசம்
அருணாசல பிரதேச மாநில கிராமம் ஒன்றில் அனைத்து மக்களும் ஒரே நாளில் கோடீசுவரர் ஆகி உள்ளனர்.
இந்தியா – சீனா எல்லைக் கிராமமான போம்ஜா அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு சீனா எல்லை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதையொட்டி இங்கு ராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அதற்காக இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து சுமார் 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தற்போதைய விலை விவரப்படி ராணுவம் அந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கி உள்ளது. அருணாசல பிரதேச முதல்வர் பேமா காந்து இந்த இழப்பீடு தொகையை ஒரு விழாவில் அந்த கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார். மொத்தம் சுமார் 40.8 கோடி ரூபாய் அங்குள்ள 31 குடும்பங்களுக்கு வழங்கபட்டது.
அதிக பட்சமாக ஒரு குடும்பம் ரூ. 6.73 கோடியும், மற்றொரு குடும்பம் ரூ. 2.45 கோடியும் பெற்றுள்ளது. மற்ற 29 குடும்பங்கள் தலா ரூ.1.09 கோடி பெற்றுள்ளன. தற்போது இந்தியாவிலேயே அந்த கிராமத்தில் மட்டுமே அதிக அளவில் கோடீசுவரர்கள் உள்ளனர். விரைவில் இந்த கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமம் என அறிவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.