மதுரை:

லக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ந்தேதி ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கோவிலை சுற்றி உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நிர்வாக குளறுபடி காரணமாக கோவில் வளாகத்தில் 115 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்துள்ளன.  இதுவும் தீ விபத்துக்கு காரணம் என்றும், ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டே, தேசிய புலனாய்வு அமைப்பு  தமிழக அரசுக்கு  எழுதி உள்ள கடிதத்தில்,  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை என்றும்,  1997-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றை புராதன சின்னங்களாக பறைசாற்ற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் நலனை பாதுகாக்க மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டி ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று  நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கோவிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தனர்.

மேலும் கோவில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோவிலில் தீ தடுப்பு கருவிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,  அந்த கருவிகளை கையாளுவது குறித்து கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டும் என்றும்  கோவில் முழுவதும் உள் மின் இணைப்புகளை  மாற்றி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்ட குழு அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு மார்ச் 13-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.