சென்னை,
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது தமிழகத்தைத் தான் என்று அதிரடியாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினி, இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. ஜனநாயக சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மீண்டும் தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31ந்தேதி அறிவிப்பதாக கூறிய அவர், அதன்படி தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறிய ரஜினி, அடுத்து நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரது அரசியல் பயணத்திற்கான பணிகள் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்கள் ரஜினியை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, கமலின் ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து காலம்தான் பதில் சொல்லணும் என்பது குறித்த கேள்விக்கு, ரஜினியும், இதற்கு காலம்தான் பதில் சொல்லணும் என்று கமல் பாணியிலேயே பதில் அளித்தார்.
மேலும், கடந்த ஆண்டு கூறிய, சிஸ்டம் சரியில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பினர். சிஸ்டம் சரியில்லை என்று கூறியது, தமிழக அரசையா அல்லது மத்திய அரசையா என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த ரஜினி, தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு , உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
கடந்த ஆண்டு, சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினி, அது மாநிலத்திலா அல்லது மத்தியிலா என்று பதில் கூற மறுத்த நிலையில், தற்போது தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருப்பது தமிழக ஆட்சி யாளர்களியே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.