சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் நேற்று இரவு லேசானது முதல் ஒருசில இடங்களில் கனமான மழை பெய்தது. இதன் காரணமாக பனிப்பொழிவு குறையும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பனிப்பொழிவு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை, அதிகபட்சமாக வத்திராயிருப்பு பகுதியில் 11 செ.மீ., ஆய்க்குடி – 8 செ.மீ., தாராபுரம் – 6 செ.மீ., பதிவாகியுள்ளது என்றும் நேற்று இரவு பெய்த மழை காரணமாக சென்னையில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.