பெங்களூரு

ஜுனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  தனக்கு  அதிகப் பணம் தேவை இல்லாமல் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜுனியர் அணி என அழைக்கப்படும் 19 வயதுக்கு குறைந்த வீரர்கள் அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்றது.  இதற்காக அந்த அணிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.   அந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார்.   இந்த வெற்றிக்கு அவரே காரணம் என அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ ரொக்கப் பரிசுகள் அறிவித்துள்ளது.   அதில் ராகுல் டிராவிடுக்கு ரூ.50 லட்சமும்,  மற்ற வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும்,  உதவியாளர்களுக்கு ரூ.20 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.    இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர், “நான் அணியில் வீரர்கள் நன்கு விளையாடவும் உதவியாளர்களை அவர்களின் பணியில் ஊக்குவித்ததையும் தவிர வேறெதுவும் செய்யவில்லை.   அதனால் எனக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு சங்கடமாக உள்ளது.    விளையாடிய அணி வீரர்களாலும், உதவியாளர்களாலும் மட்டுமே இந்த வெற்றி கிடைத்துள்ளது.   அதனால் எனக்கு அவர்களை விட அதிகம் பணம் அறிவித்தது சரி இல்லை.   நாம் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.   அதுதான் பெரியவர்களுக்கு அழகு”  என கூறி உள்ளார்.