ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு இடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப்பகுதிக்கு  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்றார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இது ராணுவ வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அருணாசலபிரதேச பகுதியில் உள்ள சீன எல்லை பகுதிக்கு நிர்மலா சீத்தாராமன் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது காஷமீர் மாநிலத்தில் உள்ள சீன எல்லை பகுதிக்கு அவர் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதி சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பகுதியில் சீனாவும்  ராணுவத்தை குவித்து இருக்கிறது. எப்போதும் பதற்றத்துடன் காணப்படும் இந்த பகுதியில், இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார்.

முன்னதாக அவர் காஷ்மீரில் உள்ள  நுப்ரா பள்ளத்தாக்கில் தோய்சே என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு சென்று, அஙகிருந்து, சீன எல்லையையொட்டி  தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில் அமைந்துள்ள, இமய மலையின் உயரமான  ராணுவ தளத்துக்கு சென்றார்.

அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்,  பணியில் இருக்கும் ராணுவ வீரர்களை  சந்தித்து பேசியும், அவர்களின் பணிகளையும் பாராட்டினார்.  பின்னர் அவர்களுடன் இணைந்து குரூப் படம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பி அமைச்சரின் இந்த செயல் ராணுவ வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 5ந்தேதி  அருணாசலப் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டத்துக்கு சென்ற  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  அங்கு சீனா எல்லைப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.