டில்லி:
ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.
இமிகிரேஷன் அனுமதி பெற வேண்டிய பாஸ்போர்ட், பெற வேண்டிய அவசியம் இல்லாத பாஸ்போர்ட் என்பதை வேறுபடுத்தி காட்டும் வகையில் ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்டோடு ஆரஞ்ச் நிறத்தில் புதிய பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளப்படி சமத்துவ உரிமை பாதிக்கும் என்றும், வெளிநாட்டினர் பாஸ்போர்ட்டை பார்த்தவுடனே சம்மந்தப்பட்ட நபர் படித்தவரா? படிக்காதவரா? என்பதை கண்டுபிடித்து அவரை இழிவுபடுத்தும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு, பாஸ்போர்ட் கடைசி பக்கத்தில் இருந்த முகவரி விபரம் இடம்பெறாது என்றும் வெளியுறவு துறை அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு, பாஸ்போர்ட் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் அறிமுக திட்டம் கைவிடப்பட்டது. பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய கடைசி பக்கம் அச்சிடப்படாது என்ற முடிவும் கைவிடப்பட்டது. தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.