ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு, போராட்டங்கள், சோடபாட்டில் பேச்சு, அதற்கு மன்னிப்பு என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் லைம் லைட்டில் இருக்கிறார்.  

அவருக்கு துணையாக களத்தில் இறங்கியிருக்கும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், “வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் லட்சம் பர் பேரணி” என்று அறிவித்து பரபரப்பை கூட்டியிருக்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் அவரிடம் பத்திரிகை டாட் காம் இதழுக்காக சில கேள்விகளை வைத்தோம்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்

ஆண்டாளை, தான் அவமரியாதை செய்யவில்லை என்று வைரமுத்து தெரிவித்தோடு, ஒருவேளை யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் சொல்லிவிட்டார்.  பிறகு ஏன் இந்த தொடர் எதிர்ப்பு?

ஆண்டாள் எங்கள் தாய். தமிழுக்கும் தாய் அவள். இந்து மதத்தில் பெண்களுக்கு உயரிய இடம் உண்டு. கங்கா, யமுனா, காவேரி என்று நதிகளைக்கூட பெண்களின் அம்சமாக பார்ப்பது இந்து மதம். அப்படிப்பட்ட இந்து மத தெய்வங்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தினால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

ஆண்டாள் – வைரமுத்து

எனது கேள்வியே, தான் அப்படி இழிவுபடுத்தவில்லை என்றும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் வைரமுத்து தெரிவித்த பிறகும் இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தேவையா என்பதுதான்.

வருத்தம் தெரிவிப்பதாகத்தான் வைரமுத்து கூறியிருக்கிறார். எங்களுக்கு வருத்தம் எல்லாம் வேண்டாம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு வந்து நேரடியாக ஆண்டாளிடம் அவர்  மனமுருகி மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டங்கள் தொடரும்.

 எந்தமாதிரியான போராட்ட திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

 பிப்ரவரி இரண்டாம்  தேதிக்குள் ஆண்டாள் சந்நிதிக்கு வந்து  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் மூன்றாம் தேதி முதல்  ஜீயர்கள் உட்பட இந்து மதத் தலைவர்கள், பக்தர்கள் உண்ணாவிரதம் இருப்போம். அதே சமயம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்துக்களும் சந்யாசிகளும் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள்.

 உண்ணாவிரதத்திற்கு பின்னும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை எனில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிந்து திருகோஷ்டியூர் வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறும். 

இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை வலியுறுத்தி விரைவில் சென்னையில் மடாதிபதிகள் சன்யாசிகளின் மாபெரும் மாநாடும் நடைபெறும்.  இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பாரதம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவர்..

 ஓரிரு நாட்களில்  தமிழக முதல்வர் எட்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.

நிறைய போராட்டங்களைச் சொல்கிறீர்கள். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், தான் அறித்த காலவரையற்ற உண்ணாவிரதத்தை இரண்டே நாட்களில் முடித்துக்கொண்டது விமர்சிக்கப்படுகிறதே..

 அரசு அதிகாரிகள் கேட்டுகொண்டதன் பேரில், நிபந்தனையுடன்தான் உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தாக அவர் தெளவாக சொல்லிவிட்டாரே. தவிர மீண்டும் உண்ணாவிரதம் உட்பட போராட்டங்கள் நடக்கும்.. வைரமுத்து மன்னிப்ப கேட்கும்வரை தொடரும் என்றும் அறிவித்துவிட்டாரே.. இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது?

ராஜாஜி

ஆண்டாள் என்பதை கற்பிதம்தான் என்று ராஜாஜியே தெரிவித்திருக்கிறார்.. இந்த நிலையில் இத்தனை போராட்டங்கள் தேவையா என்றும் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறதே..!

 ராஜாஜி, இந்து மதத்துக்கு எதிரானவர் அல்லதான். ராமாயணம், மகாபாரதம் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார்தான்.  அதே நேரம் அவருக்கு இந்து மதத்தின் மீது பெரும் பற்று உண்டு என சொல்லமுடியாது. அவர் தனது நெற்றியல் திருமண் வைத்திருப்பது மாதிரியான புகைப்படங்கள் ஏதும் இல்லை என்பதை வைத்தே இதைக் கணிக்க முடியும். அப்படிப்பட்டவர் கூறியதை பொருட்டாக நினைக்கவேண்டியது இல்லை.

தவிர மகாத்மாகாந்தி உட்பட பல தலைவர்கள் இன்று உயிரோடு இல்லை.. ஏன் ராஜாஜியே உயிரோடு இல்லை. அதற்காக அந்தத்  தலைவர்கள்  இருந்தார்கள் என்பது கற்பனை என்று சொல்லிவிட முடியுமா?

 தங்களது கருத்துப்படி எப்போதோ ஒரு காலத்தில் இருந்தவர் ஆண்டாள். அப்படிப்பட்டவருக்காக  இத்தனை போராட்டங்கள் நடத்துகிறார்கள்.. ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் ஜீயர்கள் போராட்டம் நடத்தினார்களா என்று கேட்கப்படுகிறதே..

 அவரவருக்கு அவரவர் வேலை. எங்களுக்கு இறைப்பணிதான் விதிக்கப்பட்டிருக்கிறது.  நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. தவிர ஒட்டுமொத்த மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அனுதினமும் இறைவனை இறைஞ்சுகிறோம்.

அதே நேரம் எங்களது இறைவனை, எங்களது மதத்தை யாரேனும் இழிவுபடுத்தினால் அதற்காக குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்.. இதுதானே முறை?

இந்து கடவுள் மற்றும் மதத்தை  இழிவுபடுத்தினால் போராட்டம் நடத்துவதாகச் சொல்கிறீர்கள். இலங்கையில் ஏராளமான இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன.. இந்து மத பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்.. அப்போது நீங்கள் குரல் கொடுத்தீர்களா என்றும் ஒரு விமர்சனம் இருக்கிறது..

 அதற்காக நாங்கள் போராடவில்லை என்று யார் சொன்னது? 2009ம் ஆண்டு வாக்கில் நான் பெங்களூருவில் இருந்தன். அப்போது இலங்கையில் நடந்த கொடுமைகளைக் கண்டித்து உண்ணாவிரதம் உட்பட போராட்டங்களை நடத்தியருக்கிறோம். அப்போது மீடியாவில் அவை முக்கியத்துவம் பெறவில்லை. அதனால் தெரியவில்லை.  அந்த போராட்டங்களை எல்லாம் படம் எடுத்துவைத்துக்கொண்டு, ஆதாரம் காட்டுவதெல்லாம் எங்கள் பழக்கம் இல்லை.

இந்துமதத்துக்கு ஆபத்து என்றால் தொடர்ந்து போராடித்தான் வருகிறோம். தவிர இலங்கையில் ஏராளமான இந்து அமைப்புகள் சீரிய பணிகளை செய்து வருகின்றன.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் -மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், தனக்கு சோடா பாட்டில் வீசவும் கல்லெறியமும் தெரியும் என்று பேசியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  மீடியாக்கள்தான் அவர் பேசியதை தவறாக சித்தரிக்கின்றன. சோபா பாட்டில் வீசவும் கல்லெறியவும் தெரியும் என்றாலும் அதைச் செய்ய மாட்டோம். அனைவருக்கும் நலம் பயக்கும் விசயங்களையே செய்வோம் என்றுதான் அவர் கூறினார்.  அவர் கூறிய இரண்டாவது வார்த்தையை மறைத்துவிட்டு மீடியாக்கள் திசை திருப்புகின்றன.

அவர் பேசியதை முழுமையாகத்தான் மீடியாக்கள் வெளியிட்டன. ஒருவரைப் பார்த்து, “என்னால் உன்னை கொலை செய்ய முடியும்.. ஆனால் செய்ய மாட்டேன்” என்பது மிரட்டல்தானே..! அதுபோலத்தானே ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேச்சு இருக்கிறது.. ஜீயர்கள் பாசுரங்கள் ஆன்மிக விசயங்கள்தானே கற்பார்கள்.. சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் கற்கிறார்களா என்றும் ஒரு விமர்சனம் இருக்கிறது..

 நல்ல விசயங்களைத்தான் கற்க வேண்டும். சோடா பாட்டில் வீசவோ, கல்லெறிய பயிற்சி தேவையில்லை. தனக்கு ஆபத்து என்றால் அந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று எந்த மனிதனுக்கும் யாரும் கற்றுத்தரத் தேவையில்லை அந்த நேரத்தில் அவர்கள் வெகுண்டெழத்தான் செய்வார்கள்.

தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறோம் என்கிற போது இயல்பான ஆதங்கத்தில் வரும் பேச்சு அது. தன்னைத் தற்காத்துக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியதில் தவறே இல்லை.

 ஆனால் அவர் தனது பேச்சுக்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறாரே..

  மன்னிப்பு கேட்டதாக அவர் தெரிவித்திருப்பது தவறானது.  யாரோ அவருக்கு தவறான வழிகாட்டல் செய்திருக்கிறார்கள். அவர் பேசியதில் தவறே இல்லை என்கிற போது, எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? அவரது மன்னிப்பு பேச்சால் குழப்பம்தான் ஏற்படும்.

விஜயேந்திரர்

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது சர்ச்சையாகி இருக்கிறதே?

 அவரவருக்கு என்று ஒரு பாரம்பரியம், மரபு, வழிமுறை உண்டு. அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பதில்லை என்பது சங்கரமட மரபு. இதை அவர்களே தெரிவித்துவிட்டார்கள்.

குரான் படிப்பவர்கள், தேசிய கீதத்துக்கோ, கொடிக்கோ, வந்தே மாதரம் பாடலுக் வணங்கி மரியாதை செலுத்தாதது அவர்களது பாரம்பரியம். அதுபோலத்தான் இது. அதைக்கேட்காதவர்கள் இதைக் கேட்க வேண்டியதில்லை.

தவிர இந்த விவகாரம் குறித்து சங்கரமடம்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அதுவும் சொல்லியாயிற்று. இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது உண்டா?

 நிச்சயமாக. அது எங்கள் மரபு.

விஜயகாந்தை

தே.மு.தி.க. தலைவர்  விஜயகாந்தை நேற்று சந்தித்திருக்கிறீர்கள். என்ன பேசினீர்கள்?

 ஆண்டாளுக்கான எங்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அதன்படி பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து நன்றி சொன்னேன். அதே காரணத்துக்காக நேற்று விஜயகாந்தை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

கோயம்படில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற எங்களை அன்போடு வரவேற்றார். ஆண்டாளுக்கான எங்களது போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும். தேவைப்பட்டால் தானும் போராட்டத்தில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

பேட்டி: டி.வி.எஸ். சோமு