ராமேஸ்வரம்,
மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவம் இன்றுமுதல் பொதுமக்கள் முழுமையான பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவரான அப்துல்கலாமுக்கு ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வந்தது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்’ அமைக்கப்பட்டது.
இந்த நினைவாலயத்தை கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 27 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் கடந்த ஆண்டு, கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான கடந்த ஜூலை 27-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இந்த நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கலாமின் மாணவ பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் போன்ற வற்றுடன் 4 காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ள
இந்த இடத்தை இதுவரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்காத நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், 69வது குடியரசு தினத்தையொட்டி இன்றுமுதல் பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.