சென்னை,

மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், பழைய ரேசன் கார்டகள் செல்லுபடியாகாது என்று தமிழக- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேசன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதாக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அவர் மறைந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் கார்டு பணி தொய்வடைந்தது. அதையடுத்து, முதல்வராக எடப்பாடி பதவியேற்றதும் மீண்டும் ஸ்மார்ட் கார்டு விறுவிறுப்பானது. அதையடுத்து, கடந்த ஆண்டு  பெரும்பாலான பகுதிகளில்  ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுவழங்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம் என தமிழக அரசும் அறிவித்தது. இடையில் ஸ்மார்ட் கார்டில் பல குளறுபடிகள் இருந்தால், அதை திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மார்ச் மாதம் முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என்றும், பிப்ரவரி 28ந்தேதியுடன் பழைய ரேசன் கார்டுகள் காலாவதியாகி விடும் என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 94 லட்சத்து 47 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களில், 1 கோடியே 93 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1 லட்சத்து 47 ஆயிரம் பேரும் விரைவில் ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் விதமாக மார்ச் 1ம் தேதிக்குள் ஆவணங்களை வழங்கி ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

மார்ச் 1ம் தேதிக்குப் பின்னர் ஸ்மார்ட் அட்டைகள் இருந்தால் மட்டுமே நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.