டில்லி,

திமுக பிளவுபட்டிருந்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் டிடிவி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது டிடிவி தினகரனுக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரும் ஓ.பி.எஸ் அணியினருக்கு அதிமுக புரட்சித்தலைவி என்ற பெயரிலும் செயல்பட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், அதிமுக மீண்டும் இணைந்ததை தொடர்ந்து, அதிமுக என்ற பெயர் கட்சிக்கு மீண்டும் வழங்கப்பட்டது.

இநநிலையில், அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

அதன் காரணமாக புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தால். ஆனால், அதற்கு அவரது அணியை சேர்ந்த தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக புதிய கட்சி தொடங்கும் முடிவை தள்ளி வைத்துள்ள டிடிவி, தற்போது ஏற்கனவே உள்ள அதிமுக அம்மா என்ற பெயரிலேயே செயல்பட முடிவெடுத்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில்  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன்  புதிய மனுவை  தாக்கல் செய்துள்ளார்.

அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதனால் நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் ,  மேலும் சென்னை ஆர்.கே.நகர்  தொகுதி இடைத்தேர்தலில் தான் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், தனக்கு அதே சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.