டில்லி
தற்போதுள்ள விரைவு ரெயில்களான ராஜதானி மற்றும் ஷதாப்தி ரெயில்களை விட மேலும் வேகமான ரெயில்களை விரைவில் இந்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போது இந்திய ரெயில்வேத் துறையால் இயக்கப்படும் ரெயில்களில் மிகவும் வேகமான ரெயில்கள் ராஜதானி மற்றும் ஷதாப்தி ரெயில்கள் ஆகும். இந்த ரெயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்ல்லக் கூடியவை ஆகும். ஆனால் இப்போதுள்ள எஞ்சின்களைக் கொண்டு சராசரியாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்கின்றன.
இதனால் குறைந்தது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்ல புதிய ரெயில்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த அதிவேக ரெயில்களுக்கு ரெயில் 18 மற்றும் ரெயில் 20 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டபின் ராஜ்தானி மற்றும் ஷதாப்தி ரெயில்களுக்கு மாறாக இவை இருக்கும் என சொல்லப்படுகிறது.
”மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் முழுவதும் இந்தியாவிலேயே உருவக்கப்படும் இந்த ரெயில்கள் இறக்குமதி செய்யப்படும் ரெயில்களின் விலையில் பாதி அளவுத் தொகையில் உருவாக்கப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் ரெயில் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த ரெயிலில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட 16 பெட்டிகள் இருக்கும்.
இந்த ரெயில்களில் பொருத்தப்படும் விசேஷ இஞ்சின் வெகு விரைவாக ஓடும் என்பதால் இந்த ரெயில்கள் தற்போதைய அதி வேக ரெயில்களை விட குறைந்தது 20% வேகமாக செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது. இரு ரெயில்களுமே நவீனமாக வடிவமைக்கப்பட உள்ளன.
இந்த ரெயில்களில் முன்பு விமானத்தை போன்ற கூர்மையான முனை பொருத்தப் படுவதால் விரைவாக செல்லும் போது காற்றினால் எந்த தடங்கலும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது. அத்துடன் ரெயிலுக்குள் வைஃபை வசதிகள், தானியங்கி கதவுகள் போன்றவையும் அமைக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலை பாதிக்காத கழிப்பறைகள் கொண்டதாக இந்த ரெயில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.