டில்லி:

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடுகண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களில் இருந்து எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 2014ம்  ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில்  ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.  இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. அப்போது  உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் தண்டனைக் குறைப்பை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும் என அந்த தீர்மானத்தை நிராகரித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் வருடம் தமிழக அரசு மத்திய அரசுக்கு இது குறித்து கருத்து தெரிவித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி கடிதமொன்றை அனுப்பியது.   அந்தக் கடித்தத்துக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.  அதைத் தொடர்ந்து  இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக ஒரு தீர்ப்பு வழங்குமாறு  உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

அதையொட்டி உச்ச நீதிமன்றம் தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்துக்கு பதில் அளிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.   இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை இன்னும் 3 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.