பாக்தாத்:
மயில், வேல், பாம்பு ஆகியவற்றை வழிபடுவது, தீபாரதனை செய்வது, எண்ணெய் விளக்கு ஏற்றுவது என்று தமிழ் மக்களைப்போலவே ஈராக் யாசிதி இன மக்களின் வழிபாட்டு முறையும் இருக்கிறது.
சிந்து சமவெளி நாகரிகம் ஆதித் தமிழர் நாகரிகம்தான் என்றும் இந்திய துணைக் கண்டனத்துக்கு அப்பாலும் ஆதித் தமிழர் வாழ்ந்தனர் என்றும் ஒரு கருத்து உண்டு. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில சான்றுகள் உள்ளன.
ஈரானில் பிராகுய் எனும் திராவிட மொழி பேசப்பட்டு வருவது ஒரு உதாரணமாகும்.
அதே போல இன்னொரு உதாரணம், ஈராக் நாட்டில் வசிக்கும் யாசிதி இன மக்கள். இந்த இன மக்கள், தங்களை இந்திய துணைக் கண்டத்துடன் தொடர்புடையவர்களாக கருதுகின்றனர்.
இவர்களது வழிபாட்டு முறை இஸ்லாமிய , கிறிஸ்துவ வழிபாட்டு முறை போன்று இல்லாமல், தமிழர்களின் வழிபாட்டு முறை போலவே உள்ளது.
மயிலும் பாம்பும் யாசிதிகளின் வழிபாட்டு குறியீடுகளாக உள்ளன. இவர்களது வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் உள்ளது போல கோபுர வடிவில் இருக்கின்றன. மேலும் தமிழர்களைப் போலவே எண்ணெய் விளக்கு ஏற்றி, தீபாரதனை காட்டி வழிபாடு நடத்துகின்றனர். அதே போல மலைகளில் தங்கள் வழிபாட்டுத்தலங்களை கட்டியிருக்கிறார்கள்.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொடூரமாக வேட்டையாடப்பட்டவர்கள் யாசிதிகள். அப்போது இந்தியாவின் உதவியை நாடி யாசிதி இனப் பிரதிநிதிகள் இங்கே வருகை தந்தனர்.
இம் மக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு குறித்து ஆய்வு நடத்துவது அவசியம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.