நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் முடிந்தவுடன் அடுத்ததாக ‘சபாஷ் நாயுடு” படத்தின் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இன்னுமொரு படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் உலவின.
தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படம் பிரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். படத்தை ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நடிகர் கமலை வைத்து ‘தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர். “தூங்காவனம் திரைப்படமும் ஒரு பிரெஞ்ச் படத்தின் ரீமேக்தான்.
விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் தெரிகிறது.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார்.
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்” என்று பதிவிட்டுள்ளார்.