இம்பால்,
மணிப்பூர் முதல்வர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் விமானத்தின் சக்கரம் விரிவடைந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது.
இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த மணிப்பூர் முதல்வர் நோங்தம்பம் பிரன் உள்பட 160 பேர் உயிர்தப்பினர்.
இந்த விபத்துக்கு குறித்து மணிப்பூர் முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விமான பயணம் குறித்தும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை குறித்தும் மணிப்பூர் முதல்வர் தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எங்கள் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பறவையின் தாக்குதலுக்கு உள்ளாது. இதையடுத்து, விமானம் கவுகாத்தியில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், கவுகாத்தி விமான நிலைய அதிகாரிகளும் நிர்வாகமும் மிகவும் மோசம் என்றும், விமானத்தினுள் அமர்ந்திருந்த பயணிகளுக்கு எந்தவித உதவிகளோ, உணவோ வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
பாதிப்புக்குள்ளான விமானத்தில் உள்ளவர்களை மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், 3 விமான நிலைய ஊழியர்கள் மட்டுமே அங்கு இருந்ததாகவும், அடுத்த விமானம் நாளை பிற்பகல்தான் வரும் என்று கூறியதாகவும் கூறி உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஏர்இந்திய விமான செய்தி தொடர்பாளர் கூறும்போது, விமானத்தின்மீது பறவை மோதியதால் விமானத்தின் சக்கரம் விரிவடைந்தது. இதன் காரணமாக விமானம் உடடினயாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை தொழில்நுட்ப வல்லுனர்கள் சோதனை செய்தனர் என்று கூறினார்.
மேலும், விமானத்தை சரிபார்க்க கொல்கத்தாவிலிருந்து ஏர் இந்தியா விமான தொழில்நுட்ப வல்லுனர்களையும், தேவையான பொருட்களையும் அனுப்பி உள்ளது, தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை மீண்டும் இயக்கும் விதத்தில் விமானத்தை தகுதியுடையதாக ஆக்குவார்கள் என்று கூறினார்.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்றவாறு அவர்களை கவனித்ததாகவும் கூறிய அவர், கவுகாத்தியில் இருந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா கூடுதல் விமான சேவையை இயக்கவுள்ளதாகவும் கூறி உள்ளார்.